நமது இதயத்தை தூய்மைப்படுத்திட அடிப்படையாக அமைவது அல்லாஹ்வின் மீதான அன்பும் பற்றும் ஆகும்.
இது தொடர்பில் அல்லாஹ் தன் அருள்மறையில், 'நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்கள் அனைத்தையும் விட என்னையே அதிகம் நேசிப்பார்கள்'. (அல்குர்ஆன்) என்று குறிப்பிட்டுள்ளான்.
அதன் காரணத்தினால் அல்லாஹ்வும் அவனுடைய இறுதித்தூதர் முகம்மத் (ஸல்) அவர்களும் மற்றெல்லாரையும் விட ஒரு மனிதனுக்கு அன்புக்குரியவர்களாக ஆகிவிட வேண்டும். அதுவே இஸ்லாமிய போதனையின் அடிப்படையாகும்.
இந்நிலையை அடைந்து கொள்ள எவர் தவறி விடுகிறாரோ அவரை ஈமானில் உறுதியுடையவர் எனக் கருத முடியாது.
அல்லாஹ்வின் மீது அன்பு கொள்வதென்பது வீட்டைத் துறந்து காட்டில் மறைந்து தவத்தில் கலந்திருப்பது அல்ல. மாறாக நாம் சந்தையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் சரி, அலுவலகத்தில் பணியாற்றினாலும் சரி அத்தனை இடங்களிலும் அல்லாஹ் காட்டியவழிகளிலேயே நமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அதுவே அல்லஹ்வின் மீது அன்பு கொள்ளுதல் என்பதைக் குறிக்கும்.
முதலில் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுக்கொள்ள உதவும் ஒரே வழி தொழுகையாகும். தொழுகையில் நாம் அல்லாஹ்வோடு உரையாடுகிறோம். அவனிடம் முறையிடுகிறோம். பாவமன்னிப்புக் கோரி அவரிடம் மன்றாடுகிறோம். அல்லாஹ்வின் முன் எந்தவித நிபந்தனையுமின்றி நாம் சரணடைந்து விட்டோம் என்ற பிரகடனத்தை வெளிப்படுத்தும் இடமாகவே தொழுகை விளங்குகிறது. இதுவே நாம் அல்லாஹ்வின் பால் கொண்டுள்ள அன்பின் அடையாளமாகும்.
அதேநேரம் தொழுகையானது, அங்க அசைவுகளைக் கொண்டு நிறைவேற்றப்படும் வெற்றுச் சடங்குமல்ல என்பதையும் புரிந்து கொள்ளவும் தவறக்கூடாது. அல்குர்ஆனுக்கு வழங்கப்பட்டுள்ள எத்தனையோ விளக்கவுரைகள் உள்ளன. எனினும் நாம் முதலில் அல்குர்ஆனை நேரடியாகப் படித்து புரிந்து கொள்ளவேண்டும். அது என்னென்ன படிப்பினைகளைத் தருகிறது என்பதை தெரிந்திட முயற்சிப்பதே முறையான முயற்சியாக இருக்கும்.
'நம்முடைய வசனங்களை ஓதக்கேட்டால் அவர்களுடைய ஈமான் (இறை நம்பிக்கை), தக்வா (இறையச்சம்) என்பன அதிகரிக்கும். (அல் குர்ஆன்)
மேலும் அல் குர்ஆன் என்பது நாம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகும். இதனை நின்று நிதானித்து மனத்தெளிவோடு ஓதி உணர்ந்திட வேண்டும். ஒவ்வொரு வசனமும் அல்லாஹ் நம்மைப் பார்த்து விடுகின்ற அன்புக்கட்டளையாகவே உள்ளன. அதனை நாம் முழுமையாக நம்பி ஏற்று நடக்க வேண்டும். அந்த மன உந்துதலோடு அல்குர்ஆனை ஓத வேண்டும். அதுவே அல்குர்ஆன் மீது அன்பு கொள்வதன் ஆழ்ந்த வெளிப்பாடாகும்.
மூலம்: குர்ராம் முராத் (ரஹ்)
தொகுப்பு: ஜத்து முகம்மத் ஹம்ஸா
0 Comments