காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை உடற்பயிற்சி, விளையாட்டு, வேலைகள், செய்தி என அனைத்துக்கும் நாம் செல்போன் அல்லது லேப்டாப்பையே பயன்படுத்துகிறோம். இதனால் கண்கள் சோர்வடைவதுடன், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறது. இதனால் கண் பார்வை மங்குதல், வலி மற்றும் அசௌகர்யம் போன்ற பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.
டிஜிட்டல் ஸ்க்ரீன்களை தொடர்ந்து கண்களை சிரமப்படுத்தி பார்ப்பதால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை கணினி பார்வை நோய்க்குறி (computer vision syndrome) அல்லது டிஜிட்டல் கண் திரிபு (digital eye strain) என்று அழைக்கின்றனர். கண் வறட்சி, கண்களில் நீர் வடிதல், சிவந்துபோதல், அரிப்பு மற்றும் கண்கள், கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வலி போன்றவை இந்த பிரச்னைகளின் அறிகுறிகள் என்கின்றனர் கண் மருத்துவர்கள்.
கண்களில் ஏன் சோர்வு மற்றும் அழுத்தம் ஏற்படுகிறது?
கண்களை அடிக்கடி சிமிட்டுவது கண்கள் முழுவதும் ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கண்கள் வறண்டுபோதல் மற்றும் அரித்தல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கப்படுகிறது. ஸ்க்ரீன்களில் படிக்கும்போதும், விளையாடும்போதும், வீடியோக்களை பார்க்கும்போதும் சிலர் கண்களை சிமிட்டுவதையே மறந்துவிடுகின்றனர். அப்படி நீண்டநேரம் கண்களை சிமிட்டாமல் இருப்பது கண் வறட்சிக்கு காரணமாகிறது.
மேலும், எழுத்துகளுக்கும், பேக்ரவுண்டுக்கும் உள்ள நிர வித்தியாசம், கண்கள் கூசும்படியான ஒளி மற்றும் திரையில் மாறுபடும் ஒளியின் அளவு போன்றவற்றை உடனடியாக ஏற்றுக்கொள்ள கண்கள் சிரமப்படும். இதனால் கண்கள் சோர்ந்துபோவதுடன், நீண்ட நேரம் ஸ்க்ரீன்களை பார்ப்பதற்கு சிரமப்படும்.
கண் சோர்வு / அழுத்தத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் கண்கள் சோர்வடைவதை தவிர்க்கலாம்.
20-20-20 விதியைப் பின்பற்றவும்: திரைக்கு முன்பு அதிக வேலைகள் இருந்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடைவெளி எடுத்துக்கொள்ளலாம். அதாவது 20-20-20 விதியைப் பின்பற்றலாம். 20-20-20 விதி என்பது 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 அடி தூரத்திலுள்ள ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகள் பார்க்கவேண்டும் என்பதே.
ஸ்க்ரீனை தொலைவில் வைக்கவும்: டிவி அல்லது கம்ப்யூட்டர் என எந்த ஸ்க்ரீனாக இருந்தாலும் குறைந்தது 25 இன்ச் இடைவெளியில் வைத்துதான் பயன்படுத்தவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்படி இயலாவிட்டால் ஒரு புயம் தூரத்திலாவது வைத்து பார்ப்பது கண்கள் சோர்வடைவதை குறைக்கும்.
போதுமான வெளிச்சம்: தங்கியிருக்கும் அறைக்குள் எப்போதும் போதிய வெளிச்சம் இருப்பது அவசியம். அறைக்குள் வரும் வெளிச்சத்தால் க்ளார் அடிக்காத வண்ணம் திரையை வைத்து பயன்படுத்துவது நல்லது.
டிஸ்ப்ளேயை சரிசெய்யவும்: டிஸ்ப்ளே செட்டிங்ஸை பயன்படுத்தி ஸ்க்ரீனின் வெளிச்ச அளவை சரிசெய்யவும். இதனால் ப்ளூ லைட் உமிழப்படுவது குறையும். அதேபோல் எழுத்துகளின் அளவை பெரிதாக்கி பார்க்கவும்.
காண்டாக்ட் லென்ஸ்கள்: எப்போதும் கண் கூச்சத்தை தவிர்க்கும் கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவது தேவையற்ற அழுத்தம் கண்களுக்கு ஏற்படுவதை தடுக்கும்.
0 Comments