இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் ஓ'டொனல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இருபது20 உலகக் கிண்ணத் தொடரில் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போட்டியை குறித்து கருத்து தெரிவித்த சைமன் ஓ'டென்னல், 'அது அற்புதமான ஒரு விடயம்.
டெஸ்ட் போட்டியொன்றை இங்கு நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்ட அளவுக்கு அது சிறப்பாக இருந்தது என என்னால் கூற முடியும்' என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியொன்று அல்லது இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையில் முக்கோண கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று அவுஸ்திரேலியாவில் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.
அரசியல் சர்ச்சைகள் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவது அண்மைக்காலமாக அரிதாகவுள்ளது.
அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண சுற்றுப்போட்டியில் இந்திய அணி பங்குபற்ற மாட்டாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரும் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான ஜெய் ஷா கூறியிருந்தார். அச்சுற்றுப்போட்டியை நடுநிலை இடமொன்றுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை விமர்சித்ததுடன், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலக கிண்ண சுற்றுப்போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் கோரியமை குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்திய அணி இறுதியாக 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது. அதன்பின் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியிலும் இந்தியா பங்குபற்றியது.
பாகிஸ்தான் அணி இறுதியாக 2016 ஆம் ஆண்டு இருபது20 உலக கிண்ண போட்டிகளுக்காக இந்தியாவுக்கு சென்றிருந்தது.
0 Comments