Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

”ஐகோர்ட் தவறாக சென்றுவிட்டது” ஹிஜாப் வழக்கில் நீதிபதி துலியா கருத்து-தீர்ப்பின் முழுவிவரம்....!

 

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதில் ஹேமந்த் குப்தா என்ற நீதிபதி கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும், ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம் என நீதிபதி சுதான்ஷு துலியாவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு:

ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும் சீருடை விவகாரத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும் சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்கின்போது தான் கர்நாடக உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் சிலர் சார்பாகவும் அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வில் விசாரக்கப்பட்டு வந்தது.



விசாரணையின் போது..

வழக்கு விசாரணையின் போது, “ஆடை அணிவது என்பது அடிப்படை உரிமை என நீங்கள் கூறுவீர்கள். ஆனால் ஆடை இல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமை ஆகும். சிலுவை ருத்ராட்சம் போன்றவை மத அடையாளங்கள்தான் அவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும்போது ஹிஜாபிற்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, “சிலுவை ருத்ராட்சம் போன்றவை ஆடைக்கு உள்ளே மறைக்கப்படுகின்றது. அவை வெளியே தெரிவதில்லை. அதே நேரத்தில் யாரும் அவர்களுடைய சட்டையை கழற்றி இவற்றை சோதிப்பதில்லை. ஆனால் ஹிஜாப் என்பது வெளியே தெரியக் கூடியதாக இருக்கிறது.” என வழக்கின் விசாரணையின் போது நீதிபதி கூறியிருந்தார்.

அதேபோல, “குறிப்பிட்ட ஒரு வகை உடை உடுத்துவதைக் கண்டு மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதே சீருடையின் நோக்கம். அந்த அடிப்படையில் தான் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதே, தவிர மதத்தின் அம்சத்தில் இது மேற்கொள்ளப்படவில்லை. ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான நடவடிக்கை” என கர்நாடகா அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.



அதேவேளையில், “கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் அணிந்து வரக்கூடாது என்பதாக ஒரு அரசு கூறும் பொழுது அது அனைத்து மதத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும். சீக்கியர்களுக்கு டர்பன் மற்றும் கிர்பன் என இரண்டும் வழங்கும் பாதுகாப்பைதான் இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் வழங்குகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும்பான்மை சமுதாயம் சிறுபான்மையினர் மீது எழுதும் தீர்ப்பு போல இருக்கிறது” மனுதாரர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக செப்டம்பர் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு:

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதான்ஷு துலியா அமர்வு மாறுபட்ட கருத்துகளை கொண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அதன்படி, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து உத்தர விட்டிருந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆதரித்து, உறுதி செய்திருக்கும் நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார்.



அதேச் சமயத்தில் “ஹிஜாப் அணிந்து வருவதில் எந்த தடையும் இல்லை” எனக் கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அரசின் முடிவையும் ரத்து செய்வதாக நீதிபதி சுதான்ஷு துலியா கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள நீதிபதி துலியா, “ஹிஜாப் அணிவதற்கு தடை விதிப்பதால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதே என்னுடைய எண்ணம்.

ஹிஜாபுக்கு தடை விதிப்பதால் அவர்களில் வாழ்வில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டு விடும்? மத ரீதியான பழக்க வழக்கங்களில் பிரச்னை செய்வது உகந்ததுதானா என்ற கேள்வியே எனக்குள் எழுகிறது. கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை தவறான பாதையில் இட்டுச் சென்றிருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ஹிஜாப் விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருப்பதால், தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அமர்விற்கு மீண்டும் பரிந்துரைக்கப்படுவதாகவும் கூடுதல் அமர்வு முன்பு இந்த விவகாரத்தை மாற்றுவது குறித்த முடிவை தலைமை நீதிபதியை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி...
புதிய தலைமுறை

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!