முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டிலான தேசிய மீலாதுந் நபி பெருவிழா இன்று 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி, சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், முஸ்லிம் சமுதாய கலாசார திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார், அரச ஹஜ் கமிட்டி தலைவர் அஹ்கம் உவைஸ், பேருவளை நகரபிதா மஸாஹிம் முஹம்மத், பேருவளை பிரதேச சபை தலைவர் மேனக விமலரத்ன உட்பட அதிகாரிகள், சர்வ மத தலைவர்கள், ஜாமியா நளீமிய்யா கலாபீட தலைவர் யாகூத் நளீம், சீனன்கோட்டை பள்ளிச்சங்க தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியார் உட்பட கலாபீட முக்கியஸ்தர்கள் என பலரும் விழாவில் பங்குபற்றுவர்.
தேசிய மீலாத் விழா வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் நடைபெறுவதை முன்னிட்டு கலாபீடத்தை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தபால் திணைக்களத்தினால் முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
நிகழ்வில் இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்ச்சிகளோடு உலமாக்கள் கெளரவிப்பு, களுத்துறை மாவட்ட அஹதிய்யா சமய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கல் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
விழாவுக்கான ஏற்பாடுகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸாரின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்கள அதிகாரி அஷ்ஷேய்க் முப்தி முர்ஸி (நளீமி) தெரிவித்தார்.
0 Comments