Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

”கங்குலி அரசியல் கட்சி உறுப்பினர் அல்ல; பழிவாங்காதீர்கள்”..கொந்தளித்த மம்தா! நடந்தது என்ன?

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பொறுப்பை தற்போது சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புமாறு மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக தொடர விரும்பியதாகவும் ஆனால், மற்ற உறுப்பினர்களிடமிருந்து அவர் விரும்பிய ஆதரவைப் பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.



பிசிசிஐ அமைப்பின் அடுத்த தலைவராக உலக கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி பதவியேற்க உள்ளார். அக்டோபர் 18 ஆம் தேதி திட்டமிடப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, ரோஜர் பின்னி பிசிசிஐயின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.



இந்நிலையில், சவுரவ் கங்குலிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். “கங்குலி ஒரு திறமையான நிர்வாகி. ஆனால், அவர் தலைவராக ஏன் தொடர முடியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. சில காரணங்களால், அமித் ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் (பிசிசிஐ) தொடர்கிறார். ஆனால் சவுரவ் கங்குலி நீக்கப்பட்டார். நோக்கம் என்ன? அதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.



அவர் நாட்டிற்கும் உலகிற்கும் பெருமை. அனைவருக்கும் அவரைத் தெரியும். கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் அவரைத் தெரியும். அவர் அனைவருடனும் பணியாற்றியவர். அவர் பிரபலமானவர். அதனால்தான் அவர் இழக்கப்படுகிறாரா? அவர் விலகலை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். அது மோசமானது மற்றும் வருத்தமளிக்கிறது.



கங்குலியை ஐசிசிக்கு அனுப்புவதுதான் அவரது "நீக்கத்திற்கு" ஈடுகொடுக்கும் ஒரே வழி. கங்குலி ஐசிசிக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐசிசி தேர்தலில் போட்டியிட சவுரவ் கங்குலி அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கில் அரசியல் ரீதியாக முடிவு எடுக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் அல்ல. கிரிக்கெட்டுக்காகவும், விளையாட்டிற்காகவும் ஒரு முடிவை எடுங்கள்” என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும். ஐசிசி தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட வேண்டும் என்றால், இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை பரிந்துரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!