பலஸ்தீன போட்டி அமைப்புகள் தமக்கிடையிலான 15 ஆண்டு மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்வதற்கு அல்ஜீரியாவில் கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்ற சந்திப்பில் இணங்கியுள்ளன.
இது தொடர்பிலான உடன்படிக்கையில் பத்தா அமைப்பின் மூத்த தலைவர் அஸாம் அல் அஹமது, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியா மற்றும் பலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தலால் நாஜி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
“கடந்த 15 ஆண்டுகளாக பலஸ்தீனர்கள் பிளவுபட்டிருப்பது எமது பயணத்தை பலவீனப்படுத்தி உள்ளது” என்று அஸாம் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தை சாதகமானதாகவும் அமைதியானதாகவும் இருந்தது என்று ஹனியா சுட்டிக்காட்டினார்.
ஹமாஸ் அமைப்பு வெற்றிபெற்ற 2006 ஆம் ஆண்டு தேர்தல் தொடக்கம் பத்தா தரப்பின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த புதிய பேச்சுவார்த்தை ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளில் புதிய தேர்தலை நடத்த வழிவகை செய்வதாக உள்ளது.
இந்த புதிய உடன்படிக்கையில், ஜெரூசலம் உட்பட அனைத்து பலஸ்தீன பகுதிகளிலும் ஓர் ஆண்டுக்குள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்த அனைத்துத் தரப்பும் உறுதி அளித்துள்ளன.
எனினும் தம்மிடையிலான பிளவை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக ஹமாஸ் மற்றும் பத்தா அமைப்புகள் இதற்கு முன்னர் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இதுவரை அது வெற்றி அளிக்கவில்லை.
இந்நிலையில் அல்ஜீரியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் பலஸ்தீன மக்களிடையே பெரிய எதிர்பார்ப்புகள் வெளிப்படவில்லை.
0 Comments