ஐரோப்பிய ஒன்றியத்தில் 2024 ஆம் ஆண்டுக்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுக்கான ஒற்றை சார்ஜிங் போர்ட்டை அறிமுகப்படுத்தும் புதிய விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், டைப் பி, டைப் சி என பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இன்று ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்கள் 2024 ஆண்டு முதல் ஒரே வகையான சார்ஜரை அதாவது டைப் சி சார்ஜரை பெற்றிருக்கும். 2026 ஆம் ஆண்டு முதல் மடிக்கணினிகளும் டைப் சி சார்ஜர் வசதியுடனே ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனைக்கு வரும்.
மின்னணுக் கழிவுகளை குறைக்கவும், நுகர்வோருக்கான சேவைகளைப் மேம்படுத்தவும் இந்த சட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் பதிவாகின. 8 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்தனர்.
கேபிள் வழியாக ரீசார்ஜ் செய்யக்கூடிய 100 வாட்ஸ் வரை மின்திறன் கொண்ட அனைத்து புதிய மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், டிஜிட்டல் கேமராக்கள், ஹெட்போன்கள் மற்றும் ஹெட்செட்கள், வீடியோ கேம் கன்சோல் மற்றும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், இயர்பட்கள் மற்றும் மடிக்கணினிகளில் யுஎஸ்பி டைப்-சி வகை சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments